மீண்டும் ஒரு இளம்பெண் கொடூர கொலை - காதலித்து ஏமாற்றியதால் காதலன் வெறிச்செயல்

 
Published : Dec 09, 2016, 10:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
மீண்டும் ஒரு இளம்பெண் கொடூர கொலை - காதலித்து ஏமாற்றியதால் காதலன் வெறிச்செயல்

சுருக்கம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் இன்ஜினியர் சுவாதி கொலை சம்பவம் போல், தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2வது மகள் சோனியா (23), பிளஸ் 2 முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சோனியா, வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். சுமார் 6.30 மணியளவில், தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு பஸ் மூலம் சென்றார்.

அங்கு பஸ்சில் இருந்து இறங்கியபோது, பைக்கில் வந்த ஒரு வாலிபர், சோனியாவை அழைத்தார். அவரிடம் சோனியா பேசியபோது, தன்னுடன் பைக்கில் வரும்படி அந்த வாலிபர் கூறினார். அதற்கு சோனியா மறுத்துள்ளார்.  இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அங்கு ஏராளமான மக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். இதனால், அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியாவின் கழுத்தில் சரமாரியாக அறுத்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே அந்த வாலிபர், அங்கிருந்து பைக்கில் தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்த சோனியா, உயிருக்கு போராடினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பீர்க்கன்காரணை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, உயிருக்கு போராடிய சோனியாவை மீட்டு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சோனியா பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில், சோனியாவை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு, பைக்கில் தப்பி சென்ற வாலிபர், பீர்க்கன்காரணை காவல் நிலையம் சென்று, சரணடைந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சோனியா வசித்து வந்த அதே தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (24). மெக்கானிக்கல் இன்ஜினியர். ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

ஒரே தெருவில் வசிப்பதால் பிரசாந்த், சோனிய அடிக்கடி சந்தித்து பேசினர். பின்னர், இவர்களது நட்பு காதலாக மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் சோனியாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும், மகளை கண்டித்தனர். இதனால் சோனியா, பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதையடுத்து பிரசாந்த், சோனியாவை பலமுறை பின்தொடர்ந்து சென்று தன்னிடம் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால் சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

பின்னர் சோனியா, பிரசாந்த்தை ஓரங்கட்டிவிட்டு, வேறொரு வாலிபருடன் பேசினார். இதை அறிந்த பிரசாந்த், அவரிடம் கேட்டபோது, சோனியா அவமானப்படுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரசாந்த் சோனியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

பிரசாந்த் தன்னுடைய முகநூலில் பிரசாந்த் சோனியா என்ற பெயரை சுருக்கி ‘பிரா சோனு’ என பதிவு செய்துள்ளார். சோனியாவை உயிருக்குயிராக காதலித்ததாகவும், தன் காதலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோனியா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் திரண்டு வந்து கதறி அழுதனர்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டது போல, அதே பாணியில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சோனியா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை காதலிப்பதும், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிந்து சென்றால் எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற வெறியில் இளம்பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி என்ற இளம்பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவரை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்.. வேலூர் உச்சக்கட்ட பாதுகாப்பு
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு