பைல்ஸ் சிகிச்சைக்கு வந்தவருக்கு பரலோகம்! அப்பலோவுக்கு ரூ.57.74 லட்சம் அபராதம்!

By vinoth kumarFirst Published Sep 14, 2018, 12:26 PM IST
Highlights

சென்னையில் அப்பலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அப்பலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அபானி குமார். பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவருக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிப்பதாக சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இதனை நம்பி கடந்த 2003ம் ஆண்டு அபானி குமார் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நவீன சிகிச்சை மூலமாக பைல்ஸ் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளனர். 

இதற்காக 2003ம் ஆண்டு அபானி குமார் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் சில நாட்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிகிச்சை சென்று கொண்டிருந்தது. பின்னர் திடீரென ஒருநாள் அபானி குமாரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக அப்பலோ மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர், தங்கள் மகனை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அபானி குமார் வென்டிலேட்டரில் உள்ளதால் பார்க்க முடியாது மருத்துவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். பின்னர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அபானி குமார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் 3 லட்சம் ரூபாய் கட்டணத்தை வசூலித்துவிட்டு அபானி குமார் உடலை அப்பலோ மருத்துவமனை ஒப்படைத்துள்ளது. மேலும் அபானி குமாருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டதால் பெற்றோருக்கு சந்தேகம் வந்துள்ளது. 

பின்னர் அவர்கள் விவரம் தெரிந்த மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலமாக தொடர்பு கொண்ட போது அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை. அத்துடன் அபானி குமார் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தொடர்பான எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதற்கான விவரங்களும் இருந்தன. 

பைல்ஸ் சிகிச்சைக்கு வந்தவருக்கு மயக்க மருந்து எதனால் கொடுக்கப்பட்டது என்கிற கேள்விக்கும் பதில் இல்லை. இதனை அடுத்து தங்கள் மகனுக்கு தவறான சிகிச்சை அளித்து உயிரிழக்க காரணமான அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வசூலித்துக் கொடுக்க கோரி, அபானி குமாரின் பெற்றோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது அபானி குமாருக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது என்பதற்கான ஆவணங்கள் மற்றும் எதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை அப்பலோ மருத்துவமனை கொடுக்கவில்லை. 

இதனை அடுத்து அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு 57.74 லட்சம் அபராதம் விதித்ததுடன் அந்த அபராதத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் கணக்கிட்டு 6 விழுக்காடு வட்டியுடன் அபானி குமாரின் பெற்றோரிடம் ஒப்படைக்க நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அப்பலோவிற்கு தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது மருத்துவ உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

click me!