பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் !! சாகித்ய அகாடமி விருது பெற்றவர் !!

By Selvanayagam PFirst Published May 10, 2019, 9:42 AM IST
Highlights

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74
தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர். இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.

இவர் பல்வேறு நாவல்கள, சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். இந்நிலையில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 1.20க்கு காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முகமது மீரான் உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தோப்பில் முகமது மீரான் உடல் இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.

5 புதினங்கள், 6 சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகமது மீரான் எழுதியுள்ளார். இவர் எழுதிய அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி போன்ற சிறுகதை தொகுப்புகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

அதே போல் அஞ்சுவண்ணன் தெரு, கூனன் தோப்பு, ஒரு கடலோரக் கிராமத்தின் கதை போன்றவை தோப்பில் முகமது மீரான் படைப்பில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் ஆகும்.

மீனவ கிராமங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்ட ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நூல் இன்றளவு பல இலக்கியவாதிகள் அதிகம் போற்றக்கூடிய படைப்பாகும். 

click me!