
புதுச்சேரி அருகே முள்ளோடை- மதி கிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள கோழி இறைச்சி கடையில், நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழி இறைச்சி வாங்கி சென்றுள்ளார். அதனை சமைப்பதற்கு மசாலா தடவி எடுத்து பார்த்த போது அதில் ஏராளமான புழுக்கள் நெளிந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இறைச்சியோடு அதனை வாங்கிய கடைக்கு சென்றுள்ளார். பிறகு, இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடம் புழுக்கள் இருந்த சிக்கன் கறியை காண்பித்துள்ளார்.
அதற்கு கடைக்காரர் இதுவரை யாரும் இப்படி ஒரு புகார் தெரிவித்தது கிடையாது. எனவே உங்கள் பணத்தை வேண்டுமானால் திருப்பி தந்துவிடுகிறேன் என்று சமாதானபடுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட நபர், சிக்கன் கறியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது அனைவராலும் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.