விஷம் கலந்த சாராயத்தை திருடி குடித்த கூலித் தொழிலாளி சாவு...விஷம் கலந்தவர் கைது...

First Published Apr 7, 2018, 11:50 AM IST
Highlights
worker died by drinking poisoned liquor


திருச்சி
 
திருச்சியில் விஷம் கலந்த சாராய பாட்டிலை திருடி குடித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மதுவை பதுக்கி வைத்து விற்ற இளைஞரை கொலை வழக்கில் காவலாளர்கள் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னழகன் (39). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. 

இவர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த தீபன் (32) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண்ணுக்குள் சாராய பாட்டில்கள் புதைத்து வைத்திருப்பதை அறிந்து, அதில் இரண்டு சாராய பாட்டில்களை திருடிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அந்த சாராய பாட்டிலில் ஒன்றை வீட்டில் வைத்து குடித்துள்ளார். பாதியளவு சாராயத்தை குடித்ததும் வாந்தி எடுத்து மயக்கம் போட்டுள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். 

இந்த நிலையில் சின்னழகன் சாராயம் குடித்ததால்தான் இறந்தார். எனவே, அது எரிசாராயமாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த கிராமத்தினர் இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

அதனால், காவலாளர்கள் சின்னழகனின் வீட்டிற்கு சென்று, மீதம் இருந்த சாராயத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, அதில் விஷம் கலந்து இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து துவரங்குறிச்சி ஆய்வாளர் அப்துல்கபூர் தலைமையிலான காவலாளர்கள் நடத்திய விசாரணையில் கோட்டைப்பட்டியில் இருந்து சின்னழகன் சாராய பாட்டில்களை திருடி வந்ததும், அந்த சாராய பாட்டிலில் பருத்தி செடிக்கு பயன்படுத்தப்படும் விஷம் கலந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தீபனை பிடித்து விசாரணை நடத்திய பின்னர் காவலாளர்கள், "தீபன் சாராய பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்துள்ளார். 

இது தொடர்பாக காவலாளர்கள் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளதால், வீட்டில் வைத்து சாராயம் விற்காமல் கஞ்சநாயக்கன்பட்டி அருகே வடக்கு எல்லைக்காட்டுப்பட்டியில் உள்ள தோட்டத்தில் இரண்டு பாட்டில்கள் வீதம் தனித் தனியாக மண்ணில் புதைத்து வைத்து, யாராவது கேட்கும்போது, அதை தோண்டி எடுத்து விற்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பாட்டிலில் இரண்டு பாட்டில்கள் மட்டும் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததை அறிந்த தீபன், அதனைக் கண்டுபிடிக்க பல நாட்கள் தோட்டத்தில் தங்கியிருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த தீபன் சாராய பாட்டிலின் மூடியை திறக்காமல் ஊசி மூலம் மூடியின் மேல்துளையிட்டு சாராயத்தில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். இதனால்தான் அந்த விஷம் கலந்த சாராய பாட்டிலை திருடிச்சென்று குடித்த சின்னழகன் உயிரிழந்துள்ளார்" என்று கூறினர். 

இதையடுத்து தீபன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவலாளர்கள் அவரை கைது செய்தனர்.

click me!