
கன்னியாகுமரி
தண்ணீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை வெற்றுக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் பெண்கள் நடத்திய போராட்டம் இரண்டு மணிநேரம் நீடித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், தெங்கம்புதூர் பேரூராட்சி 10–வது வார்டுக்கு உட்பட்டது காமச்சன்பரப்பு பகுதி. இங்கு கடந்த 4–ஆம் தேதி இரவில் யாரோ சில மர்ம நபர்கள் குடிநீர் குழாய்களை உடைத்துள்ளனர்.
குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்கள் உடைக்கப்பட்டதால், அதன் வழியாக குடிநீர் வெளியேறி வீணாகியது. இதனையடுத்து அந்த குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட முடியவில்லை. இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள், ஊர் தலைவர் முருகன் தலைமையில் தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்று குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். ஆனால், அந்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோபமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்றுக் காலையில் வெற்றுக் குடங்களுடன் தெங்கம்புதூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுசீந்திரம் காவலாளர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.