
மதுரை
குடிநீர், சாலை வசதி, சுகாதார சீர்கேடு போன்ற அடிப்படை வசதிகளை சரிசெய்து கொடுக்குமாறு மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகராட்சி மண்டலம் – 3 அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர், துணை ஆணையாளர் மணிவண்ணன், நகர் பொறியாளர் மதுரம் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மண்டல அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
முழக்கத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆணையாளர் அனீஷ் சேகர் அவர்களிடம் குறைகளை கேட்டார்.
அவரிடம் மக்கள், “தங்கள் பகுதியில் உள்ள குழாய்களில் குடிநீர் வருவதில்லை. லாரி மூலம் வழங்கப்படும் குடிநீர், சுத்தமாக இல்லை.
அதுமட்டுமின்றி, தங்கள் பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லை” என்று வேதனை தெரிவித்தனர்.
குடிநீர் விநியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடிப்படை வசதிகள் அனைத்தும் சீர் செய்யப்படும் என்றும் ஆணையாளர் அவர்களிடம் உறுதியளித்தார்.
இதனையேற்று முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு, மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.