
கிருஷ்ணகிரி
ஐய்யூர் காட்டுக்குள் இருந்து வழித்தவறி ஊருக்குள் காட்டு யானை புகுந்ததைக் கண்டு கிராம மக்கள் அலறி அடித்து ஓடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா ஐய்யூர் காப்புக் காட்டில் யானைகள் வசிக்கின்றன. அங்கிருந்து ஒற்றை ஆண் யானை வழித் தவறி நேற்று காலை உனிச்செட்டி கிராமம் வழியாக குருப்பட்டி, நெமிலேரி கிராமங்களுக்குள் வந்தது.
நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் வெளியே வந்துப் பார்த்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து ஆறுமுகம் தலைமையில் வனப்பாதுகாவலர் முனிராஜ், வேட்டைத் தடுப்புக் குழுவினர் மற்றும் வனக்குழுவினர் யானை உள்ள பகுதிக்கு வந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் யானையை விரட்டினர்.
சத்தத்திற்கு மிரண்டு ஓடிய காட்டு யானை நெமிலேரி கிராமத்தின் அருகில் ஏரியையொட்டி உள்ள புதரில் தஞ்சம் அடைந்தது. அந்த யானையை காப்புக் காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மக்கள் யாரும் நெமிலேரி ஏரிப் பக்கமாகச் செல்ல வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.