சாராயக் கடைக்கு எதிராக தொடரும் போராட்டம்; 5-வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய பெண்கள்…

 
Published : Jun 06, 2017, 08:31 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
சாராயக் கடைக்கு எதிராக தொடரும் போராட்டம்; 5-வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய பெண்கள்…

சுருக்கம்

Women Struggle against the liquor Shop

திருநெல்வேலி

டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஐந்தாவது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று திப்பணம்பட்டி, திப்மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி, மலையராமபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த ஐந்து நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முதல் நாளன்று சாராயக் கடையை முற்றுகையிட்டும், அங்கேயே பந்தல் போட்டு சமையல் செய்தும் சாப்பிட்டனர்.

இரண்டாவது நாள், சாராய பாட்டில்களுக்கு தாலிகட்டி ஒப்பாரி வைத்து போராடினர்.

மூன்றாவது நாள் பாடை கட்டி கொள்ளிகுடம் உடைத்துப் போராடினர்.

நான்காவது நாள் மணப்பந்தல் அமைத்து ஆணுக்கு ஆண் தாலிகட்டியும் போராட்டம் நடத்தினர்.

ஐந்தாவது நாளான நேற்று பெண்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தென்காசி தாசில்தார் அனிதா வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், “20 நாள்களுக்குள் இந்த கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும். அதுவரை போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றும் சாராயக் கடையை திறக்க விடுங்கள்” என்றும் கேட்டார்.

அதற்கு போராட்டக்காரர்கள், “இந்தப் பகுதியில் சாராயக் கடையே வேண்டாம். முற்றிலும் எடுத்து விடுங்கள், கடை அகற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

பின்னர் தாசில்தார் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

போராட்டகாரர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவிதமாக நூதன போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர், இதனால் திப்பணம்பட்டி - ஆவுடையானூர் சாலை மிகவும் பரபரப்பாகவே இருக்கிறது.

சாராயக் கடையை நிரந்தரமாக மூடும் வரை தங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் எனவும், அதுவரை இங்கிருந்து போக மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!