
கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சயான், கோவை மருத்துவமனையில் இருந்து டிஸ்கார்ஜ் செய்யப்பட்டவுடன் நீலகில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஒரு மர்மக் கும்பல் உள்ளே நுழைந்து, அங்கு பணியில் இருந்த காவலர் ஓம்பகதூரைக் கொன்றுவிட்டு, மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரைக் கடுமையாகத் தாக்கிவிட்டும் ஜெயலலிதாவின் அறையிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றது.
இந்த கொள்ளை நிகழ்வில் தொடர்பிருக்கலாம் என்று தேடப்பட்டுவந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் பலியானார். இவரது கூட்டாளியான சயன் என்பவர், பாலக்காடு அருகே சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து கோவை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஈடுபட்ட 11 பேர் கும்பலில் ஒன்பது பேரை காவல் துறையினர் ஏற்கெனவே கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயான் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து நீலகிரி காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து சயான் விசாரணைக்காக கோத்தகிரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.