
நாமக்கல்
பள்ளிபாளையம் அருகே பத்து நாள்களாக தண்ணீர் விநியோகம் செய்யாததால் வெற்றுக் குடங்களுடன் பெண்கள் முன்னறிவிப்பின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதி பரபரப்பானது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் ஊராட்சியில் உள்ளது தாஜ்நகர் பகுதி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக இங்கு குடிநீர் விநியோகம் இல்லை என்றும், இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் தாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் எஸ்.பி.பி. கீழ்காலனியில் முன்னறிவிப்பின்றி திரண்டு குடிநீர் கேட்டு அந்த வழியாக செல்லும் சாலையில் வெற்றுக் குடங்கள் கொண்டு மறித்தனர். பின்னர் அங்கேயே அமர்ந்து மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் மற்றும் பள்ளிபாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தாசில்தார் ரகுநாதன், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி “உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். இதில் சமாதானமடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.