
CV Shanmugam controversial speech : அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், தமிழ்நாட்டின் ஆளும் திமுக அரசின் இலவச நலத்திட்டங்களை விமர்சிக்கும் வகையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசி சிவி சண்முகம், தேர்தலுக்கு முன் அரசு இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு போன்ற பொருட்களை அறிவிப்பதாக விமர்சித்து, "ஏன், ஆளுக்கு ஒரு மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. தமிழக அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், "அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. சி.வி. சண்முகம் ஒரு மனிதராகவே தகுதியற்றவர். பழனிசாமி வீட்டுப் பெண்களும் இதைப் பார்த்து என்ன நினைப்பார்கள்?" என்று கடுமையாக விமர்சித்தார். அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாடினார்.
இந்தநிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவி சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடந்த 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பிய போது, அவரது வழக்கறிஞர் ஆஜராகி நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக சி.வி சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 7ஆம் தேதி காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.