சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து முகநூலில் விமர்சித்த பெண்ணுக்கு 15 நாள்கள் சிறை...

First Published Nov 22, 2017, 8:54 AM IST
Highlights
women arrested for Criticizing Chennai High Court Judge


வேலூர்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்து கருத்துத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து முகநூலில் விமர்சித்த வேலூரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.  அதன்படி, செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை சட்டவிரோதமானதாக அறிவிக்கவேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர்.

அதேநேரத்தில் கல்விக் கட்டணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி கிருபாகரன், அரசப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி கிருபாகரனை, வேலூர் சத்துவாச்சாரி குருதோப்பு பகுதியைச் சேர்ந்த லாரி அதிபர் சிவகுமாரின் மனைவி மகாலட்சுமி (41) என்பவர் முகநூலில் விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் கடந்த 21-9-2017 அன்று தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நீதிபதி குறித்து விமர்சனம் செய்த மகாலட்சுமியை நேற்று வேலூர் தெற்கு காவலாளர்கள் கைதுசெய்து வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் சமர்ப்பித்தனர். அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.  அதன்பேரில் மகாலட்சுமியை காவலாளர்கள் வேலூர் மத்திய பெண்கள் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். 

click me!