பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்த பெண் போலி மருத்துவர் கைது; சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு…

First Published Aug 7, 2017, 9:00 AM IST
Highlights
Woman arrested for duplicate medical examination


கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் அருகே பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்த்துவந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில் முருகன் மருத்துவமனை என்ற பெயரில் போலி பெண் மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார் என்று தகவல் கிடைத்தது.

இந்த தகவலைத் தொடர்ந்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் கோமங்கலத்தில் உள்ள முருகன் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் அவர் தாராபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி லதா (60) என்பதும், 10–ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவர் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் கோமங்கலம் காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவர் போலி மருத்துவர் என்பதை அறிந்ததும், தாங்கள் வாங்கிய மாத்திரைகளை திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதற்குரிய பணத்தைத் திருப்பிக் கேட்டதால் அந்த போலி மருத்துவர் லதாவுக்கும், நோயாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் விசாரணை நடத்த வந்த கண்காணிப்பாளர் கண்ணனிடமும், லதா, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

போலி பெண் மருத்துவர் பிடிபட்ட தகவல் பரவியதைத் தொடர்ந்து கிளினிக் முன் மக்கள் திரண்டனர். காவலாளர்கள் போலி மருத்துவர் லதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து லதாவை கைது செய்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் கூறியது:

“தற்போது கைதாகி உள்ள போலி பெண் மருத்துவர் லதா ஒரு மாதமாக கோமங்கலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கு முன் கூளநாயக்கன்பட்டியில் சிகிச்சை அளித்து இருக்கிறார். அங்கு மக்களிடம் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து கோமங்கலத்துக்கு வந்துள்ளார். தற்போது அவர் உடுமலை அருகே போடிபட்டி காமராஜர் நகரில் வசித்து வருகிறார்” என்று கூறினர்.

பின்னர் கைதான போலி பெண் மருத்துவர் லதாவை காவலாளர்க்கள் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஒப்ப்டைத்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

click me!