
தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக அவ்வபோது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழை இந்த ஆண்டு கொஞ்சம் முன்னதாக கடந்த மே.30 லேயே கேரளாவில் தொடங்கியது. கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் குற்றாலம், திருபரப்பு போன்ற அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இரண்டொரு நாளில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில்,
தொடங்கவிருக்கும் தென்மேற்கு பருவமழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே கேரளாவில் பெய்து வரும் மழையால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு உள்பட நெல்லை மாவட்டத்தில் உள்ள பல அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்கு பருவமழையால் மற்ற அணைகளின் நீர்வரத்தும் விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். .
தற்போது பாபநாசத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ மழையும், வலங்கைமானில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.