
காஞ்சீபுரம்
மூன்று தொகுதிகளில் த.மா.கா. போட்டியிடுமா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
காஞ்சீபுரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட த.மா.கா. தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கு 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி அந்த மாவட்டத்தின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நிர்வாகிகளுடன் கலந்து பேசி தேர்தலில் த.மா.கா போட்டியிடுவதா? என்பதை இன்று (திங்கட்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவிப்போம்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களும் வறட்சியில் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி விவசாயிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து விவசாய கடன்களையும் இரத்து செய்யவேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் அடைய இறைவனை வேண்டுகிறேன்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களையும் விவசாயிகளையும் இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் வஞ்சித்து வருகிறது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி இரயில் மறியல் மற்றும் மக்களின் பிரச்சனைகளை முன்னின்று போராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் பிரச்சனைகளுக்காக த.மா.கா. என்றென்றும் முன் நிற்கும்” என்று அவர் கூறினார்.
அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் சென்னை நந்து, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் எம்.கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஜி.கே.வாசன் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள பாடகர் மறைந்த கரந்தை ஜி.தாமோதரன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவரது உருவபடத்தை திறந்து வைத்தார்.