
சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 30 சதவீத மானியத்தில் கடன் பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தாட்கோ, 18 வயது முதல் 65 வயது வரையுள்ள வருட வருமானம் உச்ச வரம்பு ரூ.1 இலட்சம் வரை உள்ள அனைவருக்கும் அவர்கள் பொருளாதார சமூக முன்னேற்றம் அடையும் வகையில் 30 சதவீத மானியத்துடன் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகளிர்க்கு நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத்திட்டம் (பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல்), தொழில் முனைவோர் திட்டங்கள், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (18 வயது முதல் 45 வயது வரை) மருத்துவ மையம், மருந்தியல், கண்கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைக்கவும், மேம்படுத்தவும் ரூ.1½ இலட்சம் முதல் வங்கி கடன் 30 சதவீத மானியத்தில் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். வாகன கடன் பெற ஓட்டுனர் உரிமம், பெற்றிருக்க வேண்டும்.
சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி குறைந்தபட்சம் 5 பேர் கொண்ட ஆதிதிராவிடர் இன உறுப்பினர் குழுவிற்கு 30 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதி திட்டம் மற்றும் தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டங்களின் கீழ் ரூ.2 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மகளிர், ஆடவர், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டங்களில் பயன்பெற வயது வரம்பு இல்லை.
இந்திய குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 இலட்சம் ஆகும்.
பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செலவு கணக்கு நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட பட்டயக்கணக்கர், செலவு கணக்கர்களுக்கு ரூ.50 ஆயிரம் அலுவலகம் அமைதிட வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது வரம்பு 25 முதல் 45 வரை உள்ள மத்திய–மாநில பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்துள்ள சட்ட பட்டதாரிகளுக்கு அலுவலகம் அமைத்திட ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்”.
என்று ஆட்சியர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.