விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் பிறக்குமா என வெண்மணி நினைவு நாளில் ரவிக்குமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்
தஞ்சை மாவட்டம் நாகை தாலுகாவில் அதாவது இன்றைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள வெண்மணி கிராமத்தில் கடந்த 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று ஆண், பெண் குழந்தைகள் என 44 தலித்கள், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், ராமையா என்பவரின் குடிசையில் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் மிகப்பெரும் துன்பியல் சம்பவமாக பார்க்கப்படும் வெண்மணி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் பிறக்குமா என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவர்களையே அது குறிக்குமென்று பொதுப்புத்தியில் பதிந்துபோயுள்ளது.நிலத்தில் வேலைசெய்து விளைவிக்கும் தொழிலாளர்களை எவரும் விவசாயி என எண்ணுவதில்லை.நிலம் வைத்துள்ள விவசாயிகள்தான் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக முடியும், கடன்பெற முடியும். விவசாயத்துக்கென பொதுத்துறை வங்கிகளால் கொடுக்கப்படும் கடன்களையும் அவர்களே பெற முடியும். பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் நிலம் வைத்திருந்தால்தான் பதிவுசெய்துகொள்ள முடியும். குறைந்த வட்டியில் விவசாய நகைக் கடன் பெறவேண்டும் என்றால்கூட நிலம் சொந்தமாக இருக்கவேண்டும். கூட்டுறவு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், வரி ரத்து, வட்டி தள்ளுபடி என அரசு அறிவிக்கும் எல்லா சலுகைகளும் நிலம் உள்ளவர்களுக்குத்தான். அவை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தருவதில்லை.
தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடரின்போது மட்டுமின்றி விவசாய நிலங்களின் பரப்பு சுருங்கிவருவதால் சாதாரண காலங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயத் தொழிலாளர்கள்தான். ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அருகிவிட்டதால் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் தமது ஊர்களைவிட்டு இடம்பெயர்ந்து பெரு நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது. இப்படி ’வேளாண் அகதிகளாக’ விரட்டப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நகரங்களிலும் வேலை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
2022 ஆம் ஆண்டில் இந்திய அளவில் விவசாயத் துறையில் ஈடுபட்டிருந்த மொத்தம் 11,290 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என தேசிய குற்ற ஆவண மையத்தின் ( என்.சி.ஆர்.பி ) அறிக்கை ( 'Accidental Deaths and Suicides in India' - ADSI 2022) . அதில் 6,083 பேர் விவசாயத் தொழிலாளர்கள்.
2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 606 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர் ( 567 பேர் ஆண்கள், 39 பேர் பெண்கள் ). இது இந்திய அளவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 10% ஆகும் ( பக்கம் 246) . விவசாயத் தொழிலாளர் தற்கொலையில் மகாராஷ்டிரா (1540), கர்னாடகாவுக்கு(1069) அடுத்ததாக 3 ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. வறுமையும், வேலையின்மையுமே விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகிறது.
நூற்றுக் கணக்கில் தற்கொலை நேர்ந்தாலும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்றப்படவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் திரட்டப்பட்ட தொழிலாளர்களாக இல்லை என்பதுதான். அவர்களுக்கென பரிந்துபேச அரசியல் கட்சிகளும் முன்வருவதில்லை.
விவசாயத் தொழிலாளர்களின் கூலி, மற்ற துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலியைவிட மிக மிகக் குறைவு. அவர்களுக்கான ஊதியம் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையிலிருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி குறைந்தபட்ச கூலியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இந்தக் காலவரையறை மிகவும் அதிகமாக இருக்கிறது எனவே இதை மாற்றி அமைக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
2001ஆம் ஆண்டு சென்னையில் கூடிய தென்னிந்திய மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான குறைந்தபட்ச கூலியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மற்ற துறைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் திருத்தி அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதைத் தொழில் நிறுவனங்கள் ஏற்கவில்லை. பழையபடியே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றையெல்லாம் விரிவாக ஆராய்ந்த தமிழக அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்ச கூலியைத் திருத்தியமைப்பது என 2004ஆம் ஆண்டில் முடிவு செய்தது.
புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.7 ட்ரில்லியன் முதலீடு செய்யும் இந்திய ரயில்வே!
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தியமைக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி தமிழ்நாட்டில் உழவு வேலையில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளி ஏர் கலப்பை, எருதுகள் ஆகியவற்றைத் தாமே கொண்டுவந்தால் அவருக்கு 500 ரூபாயும், வெறும் ஆளாக வந்து உழவுவேலை செய்தால் 400 ரூபாயும் சம்பளம் தர வேண்டும். உழவு வேலை தவிர விதைத்தல், நடவு செய்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட அனைத்துவிதமான விவசாய வேலைகளுக்கும் ஒரு நாள் சம்பளம் 229 ரூபாய் மட்டும்தான்.
அரசாங்கம் என்னதான் முடிவுசெய்து அறிவித்தாலும் ஆங்காங்கே இருக்கும் நிலமைக்கு ஏற்றபடி நிலவுடமையாளர்களால்தான் விவசாயத் தொழிலாளர்களின் கூலி தீர்மானிக்கப்படுகிறது. நிலவுடமையாளர்கள் கொடுக்கும் கூலி அரசாங்கம் நிர்ணயித்த கூலியைவிட எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். நிலவுடமையாளர்கள் குறைவாக சம்பளம் கொடுப்பது மட்டுமல்ல அரசாங்கமும் குறைந்த கூலியையே தருகிறது. நூறுநாள் வேலைத் திட்டத்தின்கீழ் கொடுக்கப்படும் ஊதியம் பல நேரங்களில் குறைந்தபட்ச கூலியைவிடக் குறைவாக இருக்கிறது எனப் புகார்கள் உள்ளன.
குறைந்தபட்ச கூலி சட்டம் என்னதான் சொன்னாலும், விவசாயத் தொழிலாளர்கள் வாங்கும் உண்மையான கூலி எவ்வளவு என்பதை அறிய மத்திய அரசு ஊரகத் தொழிலாளர் விசாரணை ( Rural Labour Enquiry Report ) அறிக்கை என ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுவருகிறது. அதில் தெரியவரும் விவரத்தைப் பார்த்தால் அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.
கூலி குறைவாகக் கிடைப்பதால் விவசாயத் தொழிலாளர்கள் கடனாளிகளாக மாறுகின்றனர். 1993-94 நிலவரப்படி விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் 35.5 % சதவீதம் கடன் சுமையில் அல்லலுற்றதாக விவசாயத் தொழிலாளர் விசாரணை அறிக்கை கூறுகிறது. ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அவர்கள் கடன் பெற்றிருந்தனர்.இப்படியான கடன் சுமையும், வேலையின்மையும்தான் அவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன. எனவே பின்வரும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும்:
* விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி நாளொன்றுக்கு 900 /- ரூபாய் என அறிவிக்க வேண்டும். இதில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு கூடாது.
* வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என அறிவித்திருக்கும் தமிழ்நாடு அரசு அதில் விவசாயத் தொழிலாளர்களுடைய நலனையும் உள்ளடக்கவேண்டும்.
* மீன்பிடித் தடைக் காலத்தில் வேலையின்றி இருக்கும் மீனவ மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘ தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தைப்போல ( NFSRS ) சாகுபடி வேலைகள் இல்லாத காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தவேண்டும்.
* 2023 பட்ஜெட்டில் அறிவித்த ‘வேளாண் பெருந் தொழில் வழித்தடம்’ ( Agro Industrial Corridor ) திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதோடு டெல்டா மாவட்டங்களின் பல இடங்களில் சிட்கோ மூலம் உணவுப் பதனிடும் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும். இந்தத் திட்டங்கள் யாவற்றிலும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயத் தொழிலாளர்களைப் பயிற்சியளித்து வேலைக்கு அமர்த்தவேண்டும்.
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என தேசிய உழவர்கள் நாளில் ( டிசம்பர் 23) நமது முதலமைச்சர் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார். வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் கண்டுள்ள அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை கட்டுப்படுத்தப்பட வேண்டும், அவர்களது கண்ணீர் துடைக்கப்படவேண்டும். கிராமப்புற வறுமை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.