
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 தேதியன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். காலை நடைபயிற்சியின்போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்றுடன் 4 வது நாளை எட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் உடல் நிலை தொடர்பாக அப்பலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில்,
இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.