கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்களை விட்டுவிட்டு வணிகர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கிறார்கள்?

First Published Mar 5, 2018, 8:49 AM IST
Highlights
Why do they take action against the merchants by leaving the manufacturers of contamination


கோயம்புத்தூர்

உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்களை விட்டுவிட்டு வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.

கோயம்புத்தூர் - அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜி.இருதயராஜா தலைமை வகித்தார்.

கோயம்புத்தூர் மண்டலத் தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், "மே 5-ஆம் தேதி சென்னையில் நடக்கும் 35-வது வணிகர் தின மாநாட்டிற்கு கோயம்புத்தூரில் இருந்து 500 வாகனங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்வது,

பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்,

கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர இரயில் விட வேண்டும்" என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு பிறகு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய - மாநில அரசு அறிவித்தது. சிலவற்றில் முழுமையாக அனுமதித்துள்ளது.

மேலும், அனைத்து பொருட்களிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் காலூன்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து வருகிறார்கள். அதற்கு அனுமதி கொடுத்தால் அனைத்து வியாபாரிகளும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிமம் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அந்த உரிமத்தில் எழுதப்பட்டு இருப்பதை அதிகாரிகள் படித்து பார்த்தால் அதை கடைபிடிக்க முடியாது என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.

அதிகாரிகள் செய்யக்கூடிய வேலையை கூட வணிகர்களை செய்ய சொல்வதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இது தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டெல்லியில் உரிமம் பெற அதற்கான ஆயத்த பணிகளை கூட வியாபாரிகள் செய்யவில்லை. அங்கு அதிகாரிகள் நெருக்கடியும் கொடுக்கவில்லை. எனவே உரிமம் பெற அதிகாரிகள் கொடுத்து வரும் நெருக்கடியை கைவிட வேண்டும்.

கலப்படம் என்றதும் அதிகாரிகள் வணிகர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். பொதுவாக பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்தான் கலப்படம் செய்கிறார்கள். இது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். வியாபாரிகளுக்கு கலப்படத்தில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட்டுவிட்டு உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் புற்றீசல் போன்று தோன்றி வருகிறது. ஆனால், மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா? என்று கேட்டால் இல்லை. தமிழகத்தில் ஆறுகள் சாக்கடை போன்று உள்ளது. எனவே, புதிதாக அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர், இந்த ஆறுகளை சீர்செய்வதற்கு தாமாகவே முன்வந்து, முதற்கட்டமாக எங்களின் பொதுப்பணியை பாருங்கள் என்று மக்கள் திரும்பி பார்க்கக்கூடிய வகையில் தமிழகத்தில் உள்ள ஆறுகளையும், ஏரிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.

வருங்காலத்தில் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை, விவசாய பிரச்சனை இல்லை, நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதை செய்து இருக்கிறோம், வந்தால் இதை செய்வோம் என்ற வழிகாட்டுதலை செய்ய வேண்டுமே தவிர, கட்சி ஆரம்பிப்பதோடு அவர்களின் பணி முடிந்து விடக்கூடாது. இதுபோன்ற பணிகளை செய்ய வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனையில் கேரளா, கர்நாடகத்துடன் தொடர்ந்து பிரச்சனை இருக்கிறது. ஆனால் மழைக் காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்போது ஏராளமான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை சேமித்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது.

அத்துடன் கர்நாடகா மற்றும் கேரளா நமக்கு தர வேண்டிய உரிமையை மீட்க அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அந்த நிலை ஏற்படும்போது நாங்கள் அதற்கு துணை  நிற்போம்" என்று அவர் பேசினார்.

 

click me!