
Southern States against Lok Sabha Delimitation: இந்தியாவில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதன்முறையாக கண்டனக்குரல் எழுப்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு
ஆளும் திமுக அரசு ஏற்பாடு செய்த இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதி 39ல் இருந்து 31 ஆக குறைந்து விடும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்று கருதி பாஜக, நாம் தமிழர் கட்சிகளை தவிர தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம்
அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எந்த தொகுதிகளையும் இழக்காது'' என்று விளக்கம் அளித்தார். ஆனாலும் தொகுதி மறுவரையறை சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் தங்கள் மாநிலங்களின் தொகுதிகள் குறைந்து வட மாநிலங்கள் கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறும் என்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஒருசேர குற்றம்சாட்டியுள்ளன.
கடைசியாக எப்போது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது?
மக்களவையின் தற்போதைய பலம் 543 ஆகும். இது 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த 1971ம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்தியாவில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை. இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு 1971ம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது.
அரசியலமைப்பின் பிரிவு 82 சொல்வது என்ன?
இதனைத் தொடர்ந்து 2001ம் ஆண்டு பாஜகவின் ஆட்சிக் காலத்தில் மேலும் 25 ஆன்டுகளுக்கு அதாவது 2026ம் ஆண்டு வரை மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தள்ளிப் போடப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவு 82 இன் கீழ் இப்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்தே மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள முடியும். இந்தியாவில் கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் கொரோனா வந்து முட்டுக்கட்டை போட்டது.
தமிழ்நாடு எத்தனை தொகுதிகளை இழக்கும்?
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை (2021 அல்லது 2031) வைத்து மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்களவை தொகுதியில் கணிசமான இடங்களை இழக்கும் என்று தரவுகள் கூறுகின்றன. அதாவது தமிழ்நாடு மக்களவை தொகுதி 39ல் இருந்து 31 ஆக குறைந்து விடும்.
கேரளா, ஆந்திராவுக்கும் பாதிப்பு
கர்நாடகாவில் மக்களவை தொகுதி இடங்களின் எண்ணிக்கை 28 இல் இருந்து 26 ஆகக் குறைய வாய்ப்புள்ளது. ஆந்திராவின் மக்களை தொகுதி இடங்கள் 42 இல் இருந்து 34 ஆகவும், கேரளாவின் மக்களை தொகுதி இடங்கள் 20 இல் இருந்து 12 ஆகவும் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்கள் அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளதால் அந்த மாநிலங்களில் மக்களவை தொகுதி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தென் மாநிலங்களின் வளர்ச்சி குறையும்
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு கணிப்பின் அடிப்படையில், மக்களவை இடங்களின் தெற்குப் பங்கு (தென் மாநிலங்கள்) 19% ஆகக் குறையக்கூடும் என்றும், வட இந்தியாவின் இடங்கள் (வட மாநிலங்கள்) சுமார் 60% ஆக உயரக்கூடும் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த விஷயத்தில் முன்கூட்டியே விழிப்படைந்துள்ளன. ஆகையால் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளுங்கள் என்று மத்திய அரசிடம் கூறி வருகின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் வட இந்தியாவை விட வளர்ச்சியில் ஒருபடி முன்னிலையில் இருக்கும் நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்து தங்களை தண்டிக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தென்மாநில முதல்வர்கள் வலியுறுத்தி உள்ளனர். வடமாநிலங்களில் மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அங்கு அரசியல் செல்வாக்கும் அதிகரித்து விடும். தென் மாநிலங்களின் வளர்ச்சி குறைந்து விடும் என்பதும் தென்மாநிலங்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மக்கள் தொகை குறைப்பிற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு
இது தவிர 1960 முதல் 1990 வரையிலான காலக்கட்டங்களில் நாட்டில் மக்கள் தொகை குறைப்பிற்கு தமிழ்நாடும், மற்ற தென் மாநிலங்களும் பெரும் பங்களிப்பு செய்துள்ளன. நாட்டுக்காக மிகப்பெரிய செயல் செய்த தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாதகம் விளைவிக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளைக்கான அரசியல் விஞ்ஞானி மிலன் வைஷ்ணவ் '2026 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் மக்களவை 848 உறுப்பினர்களாக விரிவடையும். இதனால் எந்த மாநிலமும் இடங்களை இழக்காது'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு நிபுணர்கள் யோசனை
சமீபத்திய மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் அல்லது தற்போதுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லை என்றாலும், தென் மாநிலங்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு ஒரு பகுத்தறிவு சூத்திரத்தை வகுக்க வேண்டும் என்று அரசியலமைப்பு நிபுணர் பிடிடி ஆச்சாரி கூறியுள்ளார்.
இந்த தீர்வு சரியாக இருக்குமா?
''ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு, முந்தைய கணக்கீட்டின்படி 10 லட்சம் மக்கள் தொகை என்பது சராசரியாகும். அதே நேரத்தில், லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் சண்டிகர் போன்ற சிறிய தொகுதிகள் உள்ளன. அவற்றின் மக்கள் தொகை ஒரு லட்சத்தைக் கூட தாண்டக்கூடாது. ஆனாலும் அவை ஒரு தொகுதிகளாக கருதப்படுகின்றன.
எனவே இந்த வேறுபாட்டை புதிய சூத்திரத்தில் கொண்டு வர வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் ஒரு தொகுதிக்கு 20-25 லட்சம் போன்ற வேறுபட்ட அடிப்படையைக் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை 10 லட்சமாக நிர்ணயிக்கலாம். இந்த சூத்திரத்தைப் பின்பற்றினால் மற்ற மாநிலங்களில் அசாதாரணமாக பெரிய எண்ணிக்கை இருக்காது'' என்று பிடிடி ஆச்சாரி தெரிவித்துள்ளார்.