அன்றே கணித்த ஏசியாநெட் தமிழ்: யார் இந்த சிவ்தாஸ் மீனா!

By Manikanda PrabuFirst Published Jun 29, 2023, 2:43 PM IST
Highlights

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மாநிலத்தின் தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமைச் செயலராக பணியாற்றிய நிலையில் நாளை பிற்பகலில் இறையன்பு ஐஏஎஸ் ஓய்வு பெறவுள்ளார்.

முன்னதாக, மாநிலத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக பதவியான தலைமை செயலாளர் பதவியை யார் பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டது. கோட்டை வட்டாரங்களிலும் இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. சீனியாரிட்டி அடிப்படையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இந்த பதவியை பிடிக்க முயற்சித்து செய்து வந்தனர்.

Latest Videos

தம்மை கைது செய்த போது கருணாநிதி மிகவும் தைரியமாக இருந்தார் - எம்.பி. வில்சன் பேச்சு

அந்த வகையில், ‘அடுத்த தலைமை செயலாளர், டிஜிபி யார்? ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்?’ என்ற தலைப்பில் ஏசியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தியில், அடுத்த தலைமை செயலாளர் ரேஸில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனாவின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தோம். அதன்படி, தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் 49ஆவது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கவுள்ளார்.

யார் இந்த சிவ்தாஸ் மீனா?


1989ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ்சின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். தமிழ்நாடு கேடரை சேர்ந்த 1989ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கியவர். நாகை ஆட்சியராகவும் பணியாற்றினார்.

போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய சிவ்தாஸ் மீனா, 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட இவர், முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பதவி வகித்து வரும் சிவ்தாஸ் மீனா, 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட செயல்படக் கூடியவர். ஸ்டாலின் குட்புக்கில் இடம்பெற்றவர்.

click me!