
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பணம் கொடுத்து 80 பேராசிரியர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழக பதிவாளர் ராஜினாமா செய்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் உள்பட 80 பணியிடங்களுக்கான நியமனம் நடைபெற்றது.
பேராசிரியர்களை நியமிப்பதில் ரூ.40 இலட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே நியமனத்திற்கான பட்டியலில் சிபாரிசு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அகில இந்திய பல்கலைக்கழக விதிமுறையின் கீழ், இந்த நியமனம் முறைப்படி நடைபெறுவதாக துணைவேந்தர் கணபதி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக பல்கலைக்கழக வேந்தரான தமிழக கவர்னருக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன் திங்கள்கிழமை தனது பதவியை திடீர் ராஜினாமா செய்தார். உடனடியாக இந்த பதவியில் இருந்து விலகலுக்கான அனுமதி ஆணையை துணைவேந்தர் கணபதி வழங்கினார்.
இதுகுறித்து பதிவாளர் பி.எஸ்.மோகன் கூறியதாவது:-
“பல்கலைக்கழகத்தில் 80 பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 19-ஆம் தேதி செனட் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 18-ஆம் தேதி உயர் கல்வித்துறையில் இருந்து இந்த கூட்டத்தை நடத்தக்கூடாது என்று பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர் கல்வித்துறை அனுப்பிய தகவலை எனக்கு தெரிவிக்காமல், ‘கூட்டத்தை நடத்த வேண்டாம்’ என்று துணைவேந்தர் கணபதி கூறினார்.
இதனால் 19-ஆம் தேதி கூட்டத்தை நடத்தவில்லை. அதன்பின்னர் 22-ஆம் தேதி மீண்டும் செனட் கூட்டத்தை கூட்ட அனைவருக்கும் தகவல் அனுப்புமாறு துணைவேந்தர் கூறினார். அவரது உத்தரவை ஏற்று அனைத்து செனட் உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்.
இதைத்தொடர்ந்து 22-ஆம் தேதி அன்று நடைபெற்ற செனட் கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணையில் பதிவாளர் என்ற முறையில் நானும், துணைவேந்தர் கணபதியும் கையெழுத்திட்டோம்.
ஆனால் ‘பணி நியமன உத்தரவை யாருக்கும் வழங்க கூடாது’ என்று உயர் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் என்னை துணைவேந்தர் அழைத்து பதிவாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூறினார்.
அதற்கான உத்தரவு ஆணையில், ‘நான் கட்டளைகளை சரியாக பின்பற்றவில்லை’ என்பது போல் குறிப்பாணை எழுதப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் என்னை சிக்க வைத்துவிட்டனர்” என்று பி.எஸ்.மோகன் கூறினார்.
இதைதொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளராக வனிதா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கிடையில் பேராசிரியர் நியமனம் தொடர்பாக பதவியை ராஜினாமா செய்த பி.எஸ்.மோகன் மற்றும் துணைவேந்தர் கணபதி ஆகியோரிடம் உயர் கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது. இதற்காக இருவரும் சென்னை செல்கிறார்கள்.