இன்று செந்தில் பாலாஜி நாளை யார்? லிஸ்ட்டில் இருக்கும் அமைச்சர்கள்!

Published : Jun 14, 2023, 06:03 PM IST
இன்று செந்தில் பாலாஜி நாளை யார்? லிஸ்ட்டில் இருக்கும் அமைச்சர்கள்!

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமலாக்கத்துறை லிஸ்ட்டில் இருக்கும் அமைச்சர்கள் சிலரது பெயர்கள் பற்றி தெரிய வந்துள்ளது.  

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் நாள்தோறும் ஒரு மாஜி என லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் ஏவப்பட்டன. இந்த ரெய்டுகள் இன்று அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என திமுகவை திருப்பி அடித்துள்ளது.

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சேம்பரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்

நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவார் என கருதப்படும் செந்தில் பாலாஜி மீதான இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அத்துடன், ஊழல் குற்றச்சாட்டும் சேர்ந்து கொள்ள அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீதான வழக்கை தூசி தட்டியுள்ளது.

இதேபோல், வேறு சில அமைச்சர்களும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள்.  இதுகுறித்து விசாரிக்கையில், சில அமைச்சர்களது பெயர்களையும் அவர்கள் மீதான வழக்குகளையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அந்த வகையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கடந்த ஆண்டு சுமார் 7 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தமிழ்நாடு உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதி வாரியம் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக, 2011ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த வழக்கை அமலாக்கத்துறை தூசி தட்டியது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட வழக்கில் ரூ. 6.5 கோடி மதிப்பிலான தமிழ்நாடு கால்நடை, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

செந்தில் பாலாஜி ரெய்டில் அரசியல் காழ்புணர்ச்சி இல்லை - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அதிமுக அமைச்சரவையில் 2001 - 2006 காலகட்டத்தில் கால்நடை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக  அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 2006ஆம் ஆண்டில் வழக்கு பதிவுசெய்தது. அதில், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு எந்த நேரமும் விசாரிக்கப்படலாம் என்கிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கே.என்.நேரு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து கே.என்.நேரு விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் வழக்கில் சேர்த்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், அமைச்சர் கீதா ஜீவனும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு
அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!