தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறா? என்றும் அண்ணாமலை யார்? என்றும் கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு உலகத்தைச் சுற்றிவருவதில் தான் அக்கறை இருக்கிறது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “பொது சிவில் சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் கட்சியிடம் ஒன்றுமே இல்லை. சர்தார் பட்டேல், ஜவகர்லால் நேரு போன்றவர்கள் காலம் காலமாக பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று கூறி வந்தனர்." என்று தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் வந்துதான் ஆக வேண்டும் என்ற அவர், "நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக உள்ளனர். ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார்.
"பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்பது கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்தே தெரிகிறது. பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும், இது பண்ண வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி, ஜனநாயக நாட்டில் யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள திமுகவுக்கு முன்னேற்ற பாதையில் செல்ல விருப்பமில்லை என்று குறைகூறிய அவர், "வெள்ளைக்காரர்கள் கொடுத்த வரலாற்றையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் உள்ள வசதிகளை அழித்து வருகிறார்கள். இது தான் திமுகவின் தில்லுமுல்லுத்தனம்." என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஆளும் திமுகவை சாடிய அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் பற்றி கேட்கப்பபட்டது. அதற்கு பதில் சொன்ன சுவாமி, திமுகவிற்கு சினிமாவைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. வரும் தேர்தலில் திமுக கட்டாயம் திமுக தோல்வி அடையும்” என்று கூறினார்.
பின்னர், தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பதில் சொன்ன சுப்பிரமணியன் சுவாமி, "அண்ணாமலை யாரு? தமிழ்நாட்டில் பாஜக இருக்கா? எனக்கு அதைப் பற்றி எதுவும்தெரியது. தமிழ்நாட்டில் நான் பாஜகவை பார்த்ததே கிடையாது" என்றும் தெரிவித்தார்.