எப்போ விழுமோ? பழைய பள்ளிக்கூடம்; எப்போ முடியுமோ? புது பள்ளிக்கூடம்; மாணவர்களின் படிப்பு?

 
Published : Jun 22, 2017, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
எப்போ விழுமோ? பழைய பள்ளிக்கூடம்; எப்போ முடியுமோ? புது பள்ளிக்கூடம்; மாணவர்களின் படிப்பு?

சுருக்கம்

When do sow Old school When can build New school Student

வேட்டவலத்தில் பழைய பள்ளிக்கூடம் இடிந்து விடும் நிலையிலும், புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தின் பணிகளும் பாதிலேயே நிற்கிறது. மாணவர்களின் படிப்பு கேள்விக் குறியானதால் புதிய பள்ளிக் கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. 

இந்தப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த 2010–ஆம் ஆண்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.58 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் ஒன்பது வகுப்பறைகள் மற்றும் அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

ஆனால், தற்போதுவரை புதிய பள்ளிக் கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. பழைய பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

புதிய பள்ளிக் கட்டிடத்தில் இருப்பிட வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் மாணவிகள் சுகாதார வசதிக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டிய உள்ளது.

புதிய கட்டிட வகுப்பறைகளில் கதவு, சாளரங்கள் பொருத்தப்படாததால் இரவு வேளையில் சிலர் அசுத்தம் செய்கின்றனர். அதனால் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், பள்ளி கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சினம் கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை செல்லங்குப்பம் உயர்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கக்கோரியும், கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும் பணிகள் பாதியில் நிற்பதை கண்டித்தும் செல்லங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் அவர்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து பத்து நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் காவலாளர்கள் தெரிவித்தனர். அதனையேற்று சாலை மறியலை மக்கள் கைவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!