அதிமுக - பாஜக கூட்டணி முறிவின் பின்னணியில் பல்வேறி விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது
தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சியையும் கட்சி தலைவர்களையும் விமர்சித்ததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக அதிமுக அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைத்தபோது, அதிமுக தலைவர்கள் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. மாறாக, டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மோடிக்கு பக்கத்தில் சிரித்தபடியே எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார்.
அதேசமயம், பேரறிஞர் அண்ணா மீதான அண்ணாமலையில் விமர்சனத்துக்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தனர். கூட்டணியும் உடைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன என்பது பற்றித்தான் பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் வைத்து எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது, தனக்கு கிடைத்த தரவுகளை வைத்து 25 தொகுதிகள் வரை பாஜகவுக்கு அமித் ஷா கேட்டதாகவும், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என கூறியதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகளை நாங்கள் பிரித்துக் கொடுத்துக் கொள்கிறோம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், பாஜகவுக்கு அத்தனை இடங்களை கொடுக்கவும், டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்தை பூதாகரமாக்கி கூட்டணியை அதிமுக உடைத்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் எனவும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் எனவும், வலுவான திமுக கூட்டணியை உடைக்க முடியும் எனவும் அதிமுக கணக்கு போடுவதாக தெரிகிறது.
பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டிருப்பதால்தான், அக்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் கடந்த கால தேர்தலில் சோபிக்க முடியவில்லை எனவும் அதிமுக கருதுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம், கூட்டணி முறிவு என்பதே கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தால் இரு கட்சிகளுமே தமிழகத்தில் ஜொலிக்க முடியாது என்பது பாஜக தலைமைக்கு நன்கு தெரியும். எனவேதான் தனித்து களமாடி பாஜகவின் செல்வாக்கை உயர்த்துவதுடன், தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் அல்லது அதிமுகவை அரவணைத்து ஆதரவாக இருக்க வைத்துக் கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டு, அதிமுக தலைவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தியே, கூட்டணி முறிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூட்டணி முறிவு அறிக்கையில் பாஜக தேசியத் தலைவர்கள் குறித்தோ அல்லது அக்கட்சியின் கொள்கைகள் குறித்தோ அதிமுக குறிப்பிடவில்லை. இதுவே, மேம்போக்கான இந்த கூட்டணி முறிவுக்கு சிறந்த உதரணமாக இருக்கும் என்கிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாடு என்பது நீண்டகால இலக்கு. எனவே, தனித்து நின்றால் பாஜகவின் செல்வாக்கு என்னவாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். தேவர் சமூகத்தினர் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும், பூவை ஜெகன்மூர்த்தி, ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோரது கட்சிகள் அதிமுகவில் இருப்பதால், தேவர் சமூக வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப முடியும் எனவும் பாஜக கணக்கு போடுவதாக தெரிகிறது.
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு: உச்ச நீதிமன்றம் செல்லும் கர்நாடக அரசு!
இதுபோன்று பல அரசியல் கணக்குகள் கூறப்படுவதற்கு இடையே, எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இரண்டாம் இடம் பிடிப்பார் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி இணையதளம் ஒன்றுக்கு போட்டியளித்துள்ள அவர், எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் கடும் போட்டியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்ய வேண்டும். அதனை எடப்பாடி பழனிசாமி செய்ய மாட்டார். கூட்டணி முறிந்துள்ளாதால் ஆதரவாகவும் அரசியல் செய்ய முடியாது. சிறுபான்மையினர் வாக்குகள் வரும் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். ஆனால், மோடியை அவர் எதிர்க்காத பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியை அவர்கள் நம்ப மாட்டார்கள். சிறுபான்மையினர் எதிர்த்த பாஜகவின் பல்வேறு மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என ரவீந்திரன் துரைசாமி கூறுகிறார்.
தொடர்ந்து பேசும் அவர், “சீமான் தொடர்ந்து சிறுபான்மையினர் அனுதாபத்தை பெற்று வருகிறார். அதிமுகவிடம் இருந்த சிறுபான்மையினர் வாக்குகள் ஜெயலலிதா மறைவிற்கு அவரிடம் சென்று விட்டது. மோடியையும் சீமான் வெளிப்படையாக எதிர்க்கிறார். அதனால் தமிழ்நாடு அரசியலில் ஸ்டாலின் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகள் வாங்குவார். இரண்டாம் இடத்தில் மோடியை அதிகம் எதிர்ப்பது சீமான்தான். இதனால் தேர்தலில் இரண்டாம் இடம் அவருக்கு கிடைக்கும். மோடியை எதிர்க்காததால் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை. இது 2024 தேர்தலில் தெரியவரும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
“சீமானுக்கு சுமார் 7 சதவீதத்தை நெருக்கி வாக்கு வங்கி உள்ளது. அவரது வாக்கு வங்கி உயர்ந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 38 சதவீத வாக்கு வங்கியில் இருந்து 13 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளார். திமுகவில் இருந்து செல்லும் வாக்குகள் சீமானுக்கு செல்லும். எனவே, அவர் இரண்டாம் இடம் பிடிப்பார்.” எனவும் அவர் ஆருடம் கூறுகிறார்.
ஆனால், அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருந்தவர்கள் பாஜகவுடனான கூட்டணியினால்தான். எனவே, உண்மையாகவே பாஜக எதிர்ப்புடன், அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் பழைய நிலையை அவர்களால் அடைய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.