
திருநெல்வேலி
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது என்றும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி ராமலிங்கம் அறிவுறுத்தினார்.
மக்களிடையே கந்துவட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு அறிவுப்புகளை விநியோகித்தல்செய்தல், பிரச்சாரம் செய்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மக்களிடையே சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான இராமலிங்கம் கந்துவட்டி குறித்து விழிப்புணர்வு அறிவிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர உதவி காவல் ஆணையர் விஜயகுமார், ஆய்வாளர்கள் பெரியசாமி, உதயசூரியன், திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஒருங்கிணைப்பாளர் கோமதிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து நீதிபதி இராமலிங்கம் கூறியது: "கந்துவட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வட்டிக்கு பணம் வாங்கும்போது மக்கள் தேவையில்லாத ஆவணங்களில் கையெழுத்து போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த வட்டியை விட உங்களிடம் கூடுதலாக யார் வட்டி கேட்டாலும் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
காவலாளார்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், நீதிமன்றம் மூலம் அவர்கள் மீது வழக்கு தொடர மனுதாக்கல் செய்யலாம்.
கந்துவட்டியை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. கந்துவட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது.
மேலும், வட்டி வசூலிக்க ஒருவரை துன்புறுத்தினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கந்துவட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.