
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கும் போலீஸ், தலைமை நீதிபதியை விமர்சிக்கும்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு
எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநராக இருந்த வித்யா சாகர் ராவிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர்
அடங்கிய அமர்வு விசாரித்தது.
அவர்கள் கடந்த 14 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கினர். அதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த மாறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கை 3-வது நீதிபதி எஸ்.விமலா விசாரிப்பார்கள் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் வெளியிட்ட தீர்ப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு
குறித்து சிலர் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கிருபாகரன் தலைமையிலான
அமர்வு, தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.
முதலமைச்சருக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கும் போலீஸ், தலைமை நீதிபதியை விமர்சித்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்
உயர்நீதிமன்ம் கேள்வி எழுப்பியது. இது குறித்து வரும் 25 ஆம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு
உத்தரவிட்டுள்ளது