
கணவன் மனைவி தகராறில் 2½ வயது குழந்தையை தலைகீழாக தரையில் அடித்த கொடூர தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் அவிந்திகா கை குழந்தை.
இந்நிலையில் வேல்முருகன், தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று இரவு 10.30 மணியளவில் வேல்முருகன் மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு வந்தது. இதில் ஆத்திரத்தில் இருவரும் ஒருவரையொருவர் திட்டினர்.
இதனால் ஆவேசம் அடைந்த வேல்முருகன், அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை அவிந்திகாவை தூக்கினார். திடீரென அவர் ஆத்திரத்தில் குழந்தை அவிந்திகாவை தலைகீழாக தூக்கி ஓங்கி தரையில் அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து வீறிட்டு அழுதது. இதை கண்டு அமுதா அதிர்ச்சி அடைந்தார்.
தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த குழந்தையை தூக்கிய அமுதா கதறி அழுதார். அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது வேல்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பலத்த காயத்தோடு ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அவிந்திகாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தை அவிந்திகாக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் வேல்முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
உலக தந்தையர் தினமான நேற்று பெற்ற குழந்தையை கல்நெஞ்சத்துடன் தந்தையே தலைகீழாக தூக்கி தரையில் அடித்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.