
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு நடத்தவ்வில்லை எனில் இந்திய கடற்படை நடத்தியதா என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சிமட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி படகின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் பலத்த காயமடைந்தார்.
இதனால் தமிழகத்தில் மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை காவலரை கைது செய்ய வேண்டும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.
துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது என்ற ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறி உள்ளது.
இந்த பிரச்சனை குறித்து சர்வதேச நீதிமன்றத்தை நாடி சட்டப்படி இலங்கை அரசு மீது விசாரணை கோர வேண்டும்.
இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. இலங்கை நடத்தவில்லை எனில் இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது.
இவ்வறு அவர் கூறினார்.