
மூதாட்டிகள் இருவர் தங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் யாருமே இல்லை என்றும், எங்கள் இருவரையும் கருணை கொலை செய்துவிடுங்கள் என கண்ணிர் மல்க கலெக்டரிடம் மனு அளித்தனர். மனதை உருக்கும் இந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் தனது முதல் மனைவி பழனியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் மற்றொரு பழனியம்மாள் என்பரை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், நடராஜ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது 101 வயதாகும் பழனியம்மாவும், 70 வயதாகும் மற்றொரு பழனியம்மாவும் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் எங்களது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நாங்கள் வசித்த வீட்டை உறவினர் ஒருவர் அபகரித்து விட்டார். தற்போது நாங்கள் மகள் வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்களது வீட்டை மீட்டுத்தர கோரி கடந்த 2014-ம் ஆண்டு ஆர்.டி.ஓ.விடம் விண்ணப்பித்தோம்.
அதன் பின்னர் இதுகுறித்து 22.12.17 மற்றும் 8.1.18 ஆகிய நாட்களில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளோம். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மகளுக்கு போதிய வருமானம் இல்லாததால் மருத்துவ செலவுக்கு கூட உதவி செய்ய ஆள் இல்லை. எனவே எங்களது நிலையை கருத்தில் கொண்டு பராமரிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் அவர்கள் இருவரும் தள்ளாத வயதில் முதியோருக்கான தள்ளுவண்டியில் வந்து கலெக்டரிடம் தங்களது பிரச்சனையை கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். இதையடுத்து அந்த மூதாடிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் கலெட்ர் அலுவலத்துக்கு வந்திருந்தவர்களை நெகிழச் செய்தது.