
புதுக்கோட்டை
ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, ஐட்ரோகார்பன் திட்ட ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்ய வந்த தனியார் நிறுவன அதிகாரிகளை மக்கள் சிறைபிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் அமைத்து ஐட்ரோகார்பன் எடுக்க ஆய்வு மேற்கொண்டது.
இதனை எதிர்த்து மக்கள் பல வாரங்களாக போராடிக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு போராட்டத்தைக் கைவிடுங்கள். மக்கள் விரும்பாத திட்டத்தை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று பொன்ராதாகிருஷ்ணன் முதல் தமிழிசை சௌந்தரராஜன் வரை பேட்டியாக கொடுத்தனர்.
போராட்டம் நடத்திய மக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினர். இவர்களை நம்பி மக்கள் போராட்டத்தை கைவிட்ட இரண்டு நாள் கழித்து மத்திய அரசு நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கியது.
இதனைத் தாங்கிக் கொள்ளமுடியாத மக்கள் ஐட்ரோகார்பன் திட்டம் ரத்து என்று அறிவிப்பு வரும் வரை போராடிக் கொண்டே இருப்போம் என்று தங்களது போராட்டத்தை எட்டாவது நாளாக தொடர்கின்றனர்.
இத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு பகுதியில் போராட்டம் வெடித்து அனைத்து கிராம மக்களும் ஒன்றுசேர்ந்து தங்களது கோரிக்கையை அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டைக்காடு பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள ஐட்ரோகார்பன் திட்ட ஆழ்துளை கிணற்றில் ஆய்வு மேற்கொள்ள கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு வந்தனர்.
ஓ.என்.ஜி.சி. அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்யும் ஒப்பந்தத்தை கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவனம் எடுத்துள்ளது. அதனடிப்படையில் கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் வந்தனர்.
இந்த தகவல் மக்களிடையே பரவியதும், கொந்தளித்த மக்கள் ஆய்வுக்கு வந்த தனியார் நிறுவன அதிகாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் தலைமையில் காவலாளர்கள் ஓடிவந்தனர். அவர்கள் தனியார் நிறுவன அதிகாரிகளை மீட்டு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், உதவி ஆட்சியர் அம்ரீத் மற்றும் காவலாளர்கள், தனியார் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், “அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த கெய்ராஸ் பெட்ரோலியம் என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் என தெரிவந்தது.
இதனையடுத்து உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் ஆகியோர்களை அழைத்து உதவி ஆட்சியர் அம்ரீத் விசாரணையில் கிடைத்த தகவல்களை தெரிவித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தனியார் நிறுவன அதிகாரிகளிடம் இங்கு வரும்போது மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் வரக்கூடாது என்று உதவி ஆட்சியர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதனை ஆய்வு செய்ய தனியார் நிறுவன அதிகாரிகளை வருகிறார்கள் என்றால் மக்களின் போராட்டம் அவ்வளவு அலட்சியமாக தெரிகிறதா? என்று கொதித்து எழுந்த மக்கள் தனியார் நிறுவன அதிகாரிகளை சிறைபிடித்தச் சம்பவத்தால் அதிகாரிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.