போஸ்ட்மார்ட்டம் செய்த உடலை தைக்கும் சலவைத் தொழிலாளி!

First Published May 11, 2018, 12:11 PM IST
Highlights
washing worker doing postmortem stitching work in Trichy Hospital


பிரேத பரிசோதனைக்குப் பிறகு, இறந்தவரின் உடலை சலவைத் தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இந்த சம்பவம் துறையூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து அடையாளம் தெரியாத ஒருவர் பாலியானார். இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவமனை பணியாளர், உடலை தைக்காமல், சலவைத் தொழிலாளி ஒருவரை வைத்து உடலைத் தைத்துள்ளனர்.

வாலீஸ்புரத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளியான வீரமணி என்பவர், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை தைத்துள்ளார். அவருக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், கையுறைகள் மட்டும் அணிந்தபடி உடலைத் தைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மருத்துவமனை ஊழியர்கள் பணி செய்யாமல் அரட்டை அடிப்பதும் பதிவாகி உள்ளது.

பிரேத பரிசோதனையில் இருந்த ஊழியர் ஒருவரே வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர், இறந்தவரின் உடலை சலவைத் தொழிலாளியை வைத்து தைக்க வைப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை அடுத்து, திருச்சி மருத்துவத்துறை இணை இயக்குநர் சம்ஷாத்பேகம், துறையூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறார். சலவைத் தொழிலாளி, இறந்தவரின் உடலை தைப்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

click me!