வடமாநில இளைஞர்களை தாக்கினால் கைது உறுதி! சட்டத்தை கையில் எடுக்க கூடாது - போலீஸ் எச்சரிக்கை...

First Published May 11, 2018, 11:49 AM IST
Highlights
Arrest confirm if attack north indians police warning...


வேலூர் 

குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகப்பட்டு அப்பாவி மக்கள் மற்றும் வட மாநில இளைஞர்களை தாக்குபவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று வேலூர் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட கும்பல் குழந்தைகளை கடத்தி செல்வதற்காக தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாக ‘வாட்ஸ்-அப்’பில் கடந்த மாதம் தகவல் பரவியது. 

இதனைப் பார்த்த அனைவரும் முதலில் வதந்தி என்றே நம்பினர். ஆனால், இத்தகவல் தொடர்ந்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை கடத்தல் கும்பல் எனக் கருதி வடமாநில இளைஞர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கடந்த சில நாள்களாக அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் போளூர் அருகே சாமி தரிசனம் செய்ய சென்ற சென்னையை சேர்ந்த மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்து கொலை செய்யப்பட்டார். மேலும், பலத்த காயம் அடைந்த நால்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோல, நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வடமாநில இளைஞர் ஒருவரும், சோளிங்கரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்களை தடுக்கும் வகையில் வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் நடந்தது. இதில், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என வடமாநில இளைஞர்கள், அப்பாவி மக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. 

மக்கள் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சுற்றி திரிந்தால், அவர்கள் குறித்து உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை தாக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. 

மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ள கூடாது. இதுதொடர்பாக மக்களுக்கு காவலாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தலா ஐந்து ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்க வேண்டும். 

குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்பாவி மக்கள், வட மாநில இளைஞர்களை தாக்குபவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அறிவுறுத்த வேண்டும். 

அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டாராம். 

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தலா 5 ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  ஆட்டோக்களில் காவலாளர்கள் ஒலிப்பெருக்கி மூலமாக குழந்தை கடத்தல் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
 

click me!