
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை நாள்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே கடிதங்கள் மூலம் பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், தனியார் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளை சிறப்பு வகுப்புக்கு பள்ளி வேனில் அழைத்து வந்துள்ளனர். அப்போது, வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவ - மாணவிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"உத்தரவுகளை மீறி சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை அழைத்து வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு நடத்தாமல் இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் கோடை விடுமுறையில் தனி வகுப்பு, சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று மீண்டும் அறிவிக்கப்படுகிறது.
இதையும் மீறி தனி வகுப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.