
ஈரோடு
நதிகளை இணைக்க வேண்டிய அவசர தேவை உள்ளதால் மாநில அரசிடம் உள்ள நதிகளை மத்திய அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் வானதி சீனிவாசன் கூறினார். நதிகளை இணைக்க வேண்டிய அவசர தேவை யாருக்கு உள்ளது என்று சொல்லலையே…
ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் மகா புஷ்கர விழா நேற்றுத் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோட்டு வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “காவிரி பிரச்சனையில் தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நீர் பங்கீடு முழுமையாக கிடைக்க வேண்டும். அதேசமயம் வறட்சியின்போது நாம் என்ன செய்ய வேண்டும், மழை பெய்கின்ற காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவியல் ரீதியாக ஒரு ஆய்வு முழுமையாக நடத்தப்பட வேண்டும்.
கர்நாடகத்தை நாம் நம்பி இருந்தாலும், நதிகளை இணைக்க வேண்டிய அவசர தேவை தற்போது உருவாகி உள்ளது. இதற்கு மாநில அரசுகள் பூரண ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.
மாநில அரசிடம் உள்ள நதிகளை மத்திய அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான தீர்வை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
நவோதயா பள்ளிகள் விஷயத்தில் தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த துரோகம் திராவிட கட்சிகளால் இழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தி என்கிற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு நவோதயா பள்ளியை அரசியலாக்கி இரண்டு அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றனர்.
தமிழ் மொழி வழியாகத்தான் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவை வைத்துக் கொண்டு வரும் கல்வி ஆண்டிலேயே தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததற்கு, பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லாததால் எங்களுக்கு எந்தவொரு பயனும் கிடையாது. எனவே, தகுதி நீக்கத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இல்லை.
இதுதொடர்பாக பா.ஜ.க. எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. எப்படி இருந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
நீட் தேர்வுக்கு மத்திய அரசு தெளிவான முடிவை எடுத்து உள்ளது. பின்தங்கி உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளனர். எனவே நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
இதை அரசியல் செய்து மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடக்கூடாது. தமிழக அரசு கல்வி திட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வி ஆண்டிலேயே மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த ஆண்டே நீட் தேர்வுக்கான பயிற்சியை முழுவீச்சில் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.