
புதிய அரசை மக்கள் விரும்பவில்லை. எனினும், இந்த அரசின் செயல்பாடை பொறுத்திருந்து பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியில் பண்பாடு மீட்புக்காக வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த அமைப்பு சார்பில், தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு வேல் காவடி எடுக்கும் நிகழ்ச்சி, திருத்தணியில் நேற்று நடைபெற்றது.
இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், திருத்தணி மலைக் கோயிலுக்கு பம்பை உடுக்கை, மேள தாளங்களுடன் திருப்படிகள் வழியாக நடந்து சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியது:
“எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பேரவையில் நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் ஏற்புடையதல்ல.
பெரும்பாலான எம்எல்ஏ-க்களின் கோரிக்கையை ஏற்று, பேரவைத் தலைவர் இரகசிய வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும்.
அதேநேரத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவை மாண்பை காக்கும் வகையில் நடந்திருக்க வேண்டும்.
இன்றைய அரசியலை இளைய தலைமுறையினர் உற்றுநோக்கி வருகின்றனர். வரும் தலைமுறைக்கு அரசியல் தலைவர்கள், முன் மாதிரியாக விளங்க வேண்டும்.
தமிழகத்தில் புதியதாக அமைந்துள்ள அரசை, மக்கள் விரும்பவில்லை. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அரசு எப்படி செயல்பட உள்ளது என்பதை சிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் நிகழும் கொலை, கொள்ளை சம்பவங்கள், விவசாயிகள் சாவு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்தணி முருகன் கோயிலை தூய்மையாக வைத்துக்கொள்ள கோயில் நிர்வாகம், அடியார்கள் இணைந்து செயல்பட வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.