
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை, காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி வந்த ஹரிஹரன் (27) என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த ஹரிஹரின் நண்பன் திமுக இளைஞரணி வார்டு அமைப்பாளருமான ஜூனத் அகமது (27), மாடசாமி, பிரவீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்று தமிழகத்தையே உலுக்கி உள்ளது.மேலும், இதேபோல் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை சிறுவர்கள் இளைஞர் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சட்டப்பேரவையில் இதுக்குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புகார் வந்தவுடன் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு, சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்குள் எடுத்து செல்லப்படும். மேலும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும். அதிகபட்ச தண்டனையும் பெற்று தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றார். இதுப்போன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் தற்போது விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அர்ச்சனா வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினியிடம் வழங்கினார். கைதான 4 பேரை காவலில் வைக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.