புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே கொத்த மங்கலத்தில், அரசு தரும் உணவு, நீர் போன்ற அடிப்படை நிவாரணங்கள் கிடைக்கவில்லை எனக்கூறி பொது மக்கள் நேற்று முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தை தொடர்ந்து அங்கே வந்த அரசு அதிகாரிகளை மக்கள் சிறைபிடித்தனர்
கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் உள்ளன. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நிவாரண முகாம்கள் அமைத்துள்ளது. அதில் இதுவரை 2 லட்சம் பேருக்கு மேல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல செய்திச் சேனல்கள் அமைச்சர்கள் பலர் டூவீலரில் போவது போலவும், நேரே களமிறங்கிப் பார்ப்பது போலவும் விளம்பர நியூஸ்களைப் போட்டுக் கல்லா கட்டின.
தன்னார்வலர்கள் பலரும் தானே முன்வந்து நிதி வழங்க ஆரம்பித்துள்ளனர். கேரளாவில் வெள்ளம் என்றதும் நாடு தாண்டி நிதி வந்தது, நிவாரணப் பொருட்கள் வந்தது. ஆனால் கஜா புயலுக்கு இன்று வரை மத்திய அரசு மெளனமாகவே இருக்கிறது. ஒரு மத்திய அமைச்சரும் வரவில்லை. கேரளாவுக்கு பேங்க் அக்கெளன்ட்டிலேயே பணம் கொடுங்கள் எனக் கேட்ட அரசும், மற்றவர்களும் இன்று கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். கஜா புயல் மக்களை மட்டும் அனாதையாக்கவில்லை. தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், வேதாரண்யம் மக்களின் பெரும்பாலானோரின் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தை சின்னபின்னமாக்கிச் சென்றிருக்கிறது. எண்ணற்ற ஏக்கர் தோட்டங்களும், வயல்களும், தோப்புகளும், கால்நடைகளும் அழிந்தே போயுள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே கொத்த மங்கலத்தில், அரசு தரும் உணவு, நீர் போன்ற அடிப்படை நிவாரணங்கள் கிடைக்கவில்லை எனக்கூறி பொது மக்கள் நேற்று முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தை தொடர்ந்து அங்கே வந்த அரசு அதிகாரிகளை மக்கள் சிறைபிடித்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மக்களை கலைந்து செல்லும்படி கூறி அடித்து விரட்ட, ஆவேசமுற்ற மக்கள் கலவரத்தில் இறங்கினர். இதில் ஆலங்குடி டி.எஸ்.பி., அய்யனார் மண்டை உடைந்தது. சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., திருவரங்குளம் பி.டி.ஓ., ஆலங்குடி டி.எஸ்.பி, ஆலங்குடி தாசில்தார் ஆகியோரின் வாகனங்களுக்கு கோபமுற்ற மக்கள் தீ வைத்தனர்.
தற்போது மக்களை அடக்க திருச்சி சரக டிஐஜி, புதுக்கோட்டை எஸ்பி தலைமையில், 1,000 போலீசார் கிராமத்திற்கு விரைந்துள்ளனர். இதே போல அறந்தாங்கி அருகே மரமடக்கி என்ற கிராமத்திலும், தஞ்சாவூரிலும் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.