மயானத்தில் சடலத்தை புதைக்க சென்ற கிராமத்தினர் மீது தடியடி; சடலத்தை போட்டுவிட்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம்...

First Published Jan 30, 2018, 11:32 AM IST
Highlights
villagers went buried corpse attacked leave the dead body people ran


விருதுநகர்

விருதுநகரில் தடையை மீறி மயானத்தில் சடலத்தை புதைக்க சென்ற கிராமத்தினர் மீது காவலாளர்கள் தடியடி நடத்தியதால் சடலத்தை மயானத்திலேயே போட்டுவிட்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பழைய மயானத்தில் இட நெருக்கடி, சடலங்களை எரிப்பதால் சுகாதாரக்கேடு போன்றவற்றால் ஊர் எல்லையருகே உள்ள கண்மாயை ஒட்டி புதிய மயானத்திற்கு ஊராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், புதிய மயானம் அதிக தொலைவில் இருந்ததாலும், அங்கே தண்ணீர், கட்டடம், சாலை வசதி இல்லாததாலும் பழைய மயானத்தையே பயன்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

"புதிய இடத்தில் அனைத்து வசதிகளும் விரைவில் செய்துதரப்படும்" என ஊராட்சி தரப்பில் கூறப்பட்டதால் புதிய இடத்திலுள்ள மயானத்தையே பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து உத்தரவிட்டார். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

இந்த நிலையில் நேற்று அவ்வூரைச்சேர்ந்த பால்சாமி மனைவி ஆவுடையாச்சி (65) இறந்து விட்டதால், அவரது உடலை பழைய மயானத்தில் எரிக்க உறவினர்களும், மக்களும் முயற்சி செய்தனர்.

இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை அங்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காவலாளர்களின் தடையை மீறி மயானத்தின் உள்ளே செல்ல முற்பட்டதால் காவலாளர்கள் தடியடி நடத்தினர்.

கூட்டத்தைக் கலைக்க முற்பட்ட போது சடலத்தை மயானம் அருகே போட்டுவிட்டு மக்கள் அலறி அடித்து ஓடினர். அவர்களில் பத்து பேரை காவலாளார்கள் சம்பவ இடத்திலேயே  கைது செய்தனர்.

இந்த நிலையில் மயானம் அருகே போட்டுவிட்டுச் சென்ற சடலத்தை மக்கள் மீட்க வந்தபோது, சடலத்தை புதிய மயானத்திற்கு சிலரது உதவி மூலம் காவல்துறையினரே எடுத்துச் சென்றுவிட்ட்டனர் என்பதை கேள்விப்பட்டனர்.

இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த மக்கள் கிராமத்தினுள் உள்ள சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள்(பொறுப்பு),வட்டாட்சியர் கார்த்திகேயினி மற்றும் அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் உறவினர்களிடமே ஆவுடையாச்சியின் உடல் ஒப்படைக்கப்பட்டதுடன் மக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

click me!