போலீஸ் அனுமதி மறுத்தும் ஏறு தழுவல் போட்டியை நடத்திய கிராம மக்கள்; மாடு முட்டி ஒருவர் இறந்ததால் பரபரப்பு...

First Published Aug 6, 2018, 1:34 PM IST
Highlights

அரியலூரில், காவலாளார்கள் அனுமதி மறுத்தும் கிராம மக்கள் ஏறு தழுவல் போட்டியை நடத்தினர். இதில் மாடு முட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர், க.பரதூர் என்னும் கிராமத்தில் ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) போட்டி நடத்த அப்பகுதி மக்கள் காவலாளர்களிடம் அனுமதி கேட்டனர். அதற்கு காவலாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

முறையாக அனுமதி கேட்டும் காவலாளர்கள் தர மறுத்ததால் அனுமதி இல்லாமலே ஏறு தழுவல் போட்டியை நடத்த கிராம மக்கள் கூடி முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து கிராமத்தின் பிரதான சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டு முதலில் கோயில் காளைகளும், பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், 150-க்கும் மேற்பட்ட  மாடுபிடி வீரர்கர் கலந்துகொண்டனர். சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு கூடி கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

தன்னைப் பிடிக்க முயன்றவர்களை காளைகள் முட்டியதில் திருப்பெயரைச் சேர்ந்த சக்திவேல், நத்தம் பிரகாஷ், வல்லம் கோவிந்தன், கரைவெட்டி கணேஷன், சாத்தமங்கலம் தமிழ் செல்வன், திருமழப்பாடி சின்னப்பா, இருங்களூர் தவமணி உள்பட 28 பேர் காயம் அடைந்து வீரத்தழும்பை பெற்றனர். 

இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த 9 பேரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், திருமழப்பாடி சின்னப்பாவை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவரை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே சின்னப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏறு தழுவல் வெற்றிப் பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், கட்டில், நாற்காலிகள், சைக்கிள், வெள்ளி பாத்திரங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

காவலாளார்கள் அனுமதி மறுத்தும் நடைப்பெற்ற ஏறு தழுவல் போட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

click me!