காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க ஆட்சியரிடம் அனுமதி கேட்கும் கிராம மக்கள்...

First Published Feb 27, 2018, 10:35 AM IST
Highlights
Villagers asking permission to form mushroom farming ...


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க அனுமதி தர வேண்டும் என்று ஆட்சியரிடம் கிராம மக்கள் கேட்டு உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களிடமும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகளிடமும் ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேசன் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர் இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் முத்தரசம் பூண்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை ஆட்சியரிடத்தில் கொடுத்தனர்.

அந்த மனுவில், "நாங்கள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முத்தரசம்பூண்டி ஊராட்சியில் வசித்து வருகிறோம். இந்த ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்களிடம் காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான இட வசதி உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க அனுமதி பெற்ற தர வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

click me!