
சிவகங்கை
சிவகங்கையில் பணியாற்றும் 22 கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்து உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார்.
இதில், "காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய வட்டங்களில் பணியாற்றும் 22 கிராம நிர்வாக அலுவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றக் குறிப்பாணையை (70-ஏ,பி) நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், மாநிலப் பொதுச் செயலர் கா.செல்வன் கண்டன உரையாற்றினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் பாண்டியன், மாநில அமைப்புச் செயலர் மகேந்திரன், மாநிலப் பொருளாளர் ராஜ்குமார் உள்பட சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் வந்திருந்து பங்கேற்று இருந்தனர்.