Latest Videos

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களமிறங்கும் 11 பேர் கொண்ட திமுக தேர்தல் பணிக்குழு!

By SG BalanFirst Published Jun 12, 2024, 10:39 PM IST
Highlights

ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் 11 பேரும் கலந்துகொள்வார்கள் என்று அறிவாலயத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், 11 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டார்.

மோடி 3.0 அரசில் கேபினெட் அமைச்சர்கள் என்ன படிச்சுருக்காங்க? கல்வித்தகுதி என்ன தெரியுமா?

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்தியூர் சிவா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணிகளை கவனிக்க தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி. கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உள்ளனர். மேலும், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ. டாக்டர் லெட்சுமணன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் 11 பேரும் கலந்துகொள்வார்கள் என்றும் இதில் கூட்டணி கட்சி தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்துக்கிட்டே இருக்கீங்களா? சியோமி 14 சிவி ஸ்மார்ட்போன் ஆஃபர் உங்களுக்குதான்!

click me!