லஞ்சமில்லாமல் அரசு நலத்திட்டங்கள்.. ரஜினி பாணியில் சிஸ்டத்தை கையில் எடுத்த விஜய்.. குமரியில் உத்தரவாதம்!

Published : Apr 12, 2026, 06:39 PM IST
TVK Vijay

சுருக்கம்

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடியது. லஞ்சம் கொடுத்து அரசு நலத்திட்டங்களை பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

லஞ்சமில்லாமல் அரசு நலத்திட்டங்கள்

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய் தவெக தேர்தல் அறிக்கையில் சில அம்சங்களை வெளியிட்டார். அதாவது தவெக ஆட்சிக்கு வந்தால் அரசு நலத்திட்டங்களுக்கு லஞ்சம் பெறுவது நிச்சயம் தடுத்து நிறுத்தப்படும். லஞ்சமில்லாமல் அரசியல் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும். நலத்திட்டத்துக்காக மக்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. நலத்திட்ட உதவிகள் அவர்கள் வீடு தேடி செல்லும். அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது இருக்காது.

தமிழகத்தில் ஏஐ பல்கலைக்கழகம்

ஒரு முக்கிய பிரச்சனை குறித்து 10,000 பேர் மனு அளித்தால் கட்டாயம் பதில் அளிக்கப்படும். 10 லட்சம் பேர் மனு அளித்தால் அது குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரின் ஒருநாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும். செயற்கை நுண்ணறிவு தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சேர்க்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் ஏஐ பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

மீனவர் பாதுகாப்பு உரிமை தொகை உயரும்

மேலும் மீனவர் பாதுகாப்பு உரிமை தொகையை 8000 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை படகு பாதுகாப்பு நிதி 5 லட்சம் மீனவர்களுக்கு வழங்கப்படும். கடல் தாய் வீட்டு வசதி திட்டத்தில் புது வீடுகள் கட்டித் தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு பல்வேறு வாக்குறுதிகளை கன்னியாகுமரியில் விஜய் இன்று அறிவித்தார்.

விஜய் செல்லும் சரியான திசை

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடியது. லஞ்சம் கொடுத்து அரசு நலத்திட்டங்களை பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த விவகாரத்தை சரியாக கையில் எடுத்த விஜய் தங்களின் ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் அரசு சேவைகள் முழுமையாக நடைபெறும் என்பதை வாக்குறுதியாக வழங்கியுள்ளார்.

ரஜினியை போல் விஜய்...

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்னவுடன் அரசு நிர்வாகத்தில் லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிஸ்டத்தை அடியோடு மாற்றுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் துர‌திருஷ்டவசமாக உடல் நலக்குறைவு காரணமாக அவரால் அரசியலுக்கு வர முடியவில்லை. ஆனால் சொன்னபடி அரசியலுக்கு வந்துள்ள விஜய், ரஜினியை போல் சிஸ்டத்தை கையில் எடுத்து லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பேன் என கூறியுள்ளார். விஜய்யின் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடுமா அரசியலில் அவர் புதிய சாதனை படைப்பாரா? இல்லை மக்களிடம் அவருக்கு செல்வாக்கு இருக்கதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உஷார் மக்களே! 3 நாள் பொளக்கப்போகும் வெயில்.. எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம் இதோ!
ஒன்னாம் நம்பர் துரோகி எடப்பாடி ! மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய உதயநிதி !