
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய், திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சொன்னது போல் திமுகவை தீய சக்தி என்று குறிப்பிட்ட விஜய், தீய சக்திக்கும், தவெக என்னும் தூய சக்திக்கும் இடையே தான் தேர்தலில் போட்டி என்று தெரிவித்தார். மேலும் ஈரோட்டில் எந்த பணிகளும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும் விமர்சித்தார்.
திமுகவை விஜய் தீய சக்தி என குறிப்பிட்ட நிலையில், திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், என் வீட்டில் விஜய்க்கு ஓட்டுப்போடவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்து விடுவேன் என பெண் ரசிகை ஒருவர் பேசிய பேச்சு வைரலாகிறது. ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டத்துக்கு வந்த கோகிலா என்ற அந்த பெண் பேசுகையில், ''நிறைய கூட்டம் வந்துள்ளது. இருந்தாலும் பயமாக இருக்கிறது. விஜய்க்காக நான் வந்திருக்கிறேன்.
நான் இரண்டு முறை ஓட்டு போட்டுள்ளேன். முதலில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன். அப்புறம் சீமானுக்கு ஓட்டு போட்டேன். இனி விஜய்க்கு ஓட்டு போடுவேன். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சாலை வசதி இல்லை. எல்லாமே இலவசம் எதற்கு? விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். விஜய் மக்களுக்கு சலுகை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
என் குடும்பத்தில் 9 பேரும் விஜய்க்கு தான் ஓட்டு
அரசு என்றால் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். பட்டா கொடுக்க வேண்டும். விஜய் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நான் விஜய்க்கு ஓட்டு போடுவேன். எங்கள் வீட்டில் 9 பேர் உள்ளனர். அவர்களும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார்கள். அப்படி அவர்கள் ஓட்டு போடவில்லை என்றால் சோற்றில் விஷம் வைத்து விடுவேன். விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போட வேண்டும். விஜய் அண்ணன் தான் வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.