
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு ,வட்டார போக்குவரத்து உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் கணக்கில் காட்டப்படாத லஞ்சப்பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், குறிப்பாக பத்திரப்பதிவு மற்றும் வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகங்களில் அதிக அளவு லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் லஞ்சப்பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்யப்பட்ட பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
நேற்று காலையில் இருந்து குறிப்பிட்ட அலுவலகங்கள் முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலையில் இருந்து வாங்கப்படும் லஞ்சப்பணம் மாலையில் தான் ஒன்று சேர்த்து எண்ணுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நேற்று மாலை 3 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அதிரடியாக புகுந்தனர்.
சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில், மதுரை, விருதுநகர் போன்ற ஊர்களில் சோதனை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சப்பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்தனர். சில இடங்களில் போலீசாரை கண்டதும் லஞ்சம் வாங்கியவர்கள் லஞ்சப்பணத்தை தரையில் வீசி எறிந்து விட்டு தப்பி ஓடினர்..
மதுரையில் சார்பதிவாளர் ஒருவரும், விருதுநகரில் பி.டி.ஓ. ஒருவரும் லஞ்சம் வாங்கியபோது, கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடத்தப்படும். இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றும் ஆய்வு தொடரும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.