வேலூர் அருகே பயங்கர விபத்து….அடுத்தடுத்த 3 கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி….

First Published Aug 7, 2017, 7:49 AM IST
Highlights
vellore accident...7 persons killed


வேலூர் ரத்தினகிரி அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில்  7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை-பெங்களூரு இடையே இருவழித்தடத்தில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மாலை  வேலூரிலிருந்து ஆற்காடு நோக்கி பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் என்னும் இடம் அருகே கார் சென்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரன் என்பவர் வேலூர் செல்வதற்காக சென்னை-பெங்களூரு சாலையில் மோட்டார் சைக்கிளில் சாலையின் குறுக்காக கடக்க முயன்றார்.

 

திடீரென மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் அந்த இடத்தில் உள்ள வழியாக எதிர்திசையில் செல்லும் சாலைக்கு திருப்பினார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மோதிவிட்டு கார் சென்னை-பெங்களூரு ரோட்டில் திரும்பியது. 

அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட கார் அதன் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த வினாடி பெங்களூரு நோக்கி சென்ற மற்றொரு காரும் விபத்தில் சிக்கிய கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் விபத்தில் சிக்கிய கார்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கின. 



விபத்து குறித்து தகவல் அறிந்த  ரத்தினகிரி போலீசாரும், தீயணைப்பு படையினரும்  சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் 6 பேர் இறந்தனர். மேலும் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனும் உயிர் இழந்தார்.

இந்த விபத்தால் சென்னை-பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள்  5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றன. இந்த விபத்து குறித்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

click me!