தமிழ்நாடா? கர்நாடகாவா? நடிகர் ரஜினியும், காவிரியும்..!

By Manikanda Prabu  |  First Published Sep 28, 2023, 5:22 PM IST

ரஜினிகாந்த் தமிழ்நாடு பக்கம் நிற்கிறாரா? கர்நாடகம் பக்கம் நிற்கிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்


தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் விவகாரம் பூதாகரமாகிறது என்றாலே இரண்டு பேர் முக்கியமாக அடிபடுவார்கள். ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மற்றொருவர் வட்டாள் நாகராஜ். கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் ரஜினிகாந்த்; ஆனால், அவரை சூப்பர் ஸ்டாராக்கியது தமிழ்நாடு. எனவே,  ‘உரலுக்கு ஒருபக்கம் அடினா, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி’ என்பதுபோல, இந்த விவகாரம் வந்துவிட்டாலே ரஜினிக்கு டென்ஷன் தான்.

அந்தவகையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளது. இந்த வாரத்தில் இரண்டவதாக நடக்கவுள்ள பந்த் இது. கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையிலான பல்வேறு கன்னட அமைப்புகள் ஒருங்கிணைந்த ‘கன்னட ஒக்குடா’ சார்பில் கர்நாடக மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், ரஜினிகாந்த் கர்நாடகாவில் பிறந்தவர் என்றும், இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீர்ப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காண அவர் குரல் எழுப்ப வேண்டும் என்றும் வட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

“நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருந்தாலும், அவா் கர்நாடகத்தில் இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சனையில், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால், அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்.” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்த வட்டாள் நாகராஜ், “ரஜினிகாந்த் தமிழ்நாடு பக்கம் நிற்கிறாரா? கர்நாடகம் பக்கம் நிற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகா பந்த்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

இதற்கு முன்பு பல்வேறு தருணங்களில் காவிரி விவகாரம் தொடர்பாக அவராகவோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ பல சமயங்களில் ரஜினி குரல் கொடுத்துள்ளார். அதில், முக்கியமானது 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம். காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடாததால் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த சமயம் அது. தமிழர் பாதுகாப்பு அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கிய இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரைத்துறை சங்கங்கள் பலவும் இணைந்தன.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என நெய்வேலியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்த் திரையுலகம் அறிவித்த நிலையில், அது தேவையில்லாத போராட்டம் என அறிவித்து அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ரஜினி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அப்போது, பாரதிராஜாவுக்கும், ரஜினிக்கும் இடையே பிரச்ச்சினைகள் ஓடிக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு; ஆண்டவன் தீர்ப்பு' என்ற வாசகத்துடன் தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் இருந்தார். அது தமிழ்நாட்டை உலுக்கியது; பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

அதற்கு முன்பும் பல சமயங்களில் காவிரி விவகாரத்தில் ரஜினி குரல் கொடுத்துள்ளார். 1980களில் பெங்களூரு கலவர பூமியானபோது, நான் கர்நாடகம் சென்று தமிழர்களுக்காக போராடுவேன் என்று கூறி சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 1990களில் காவிரிப் பிரச்சினை வெடித்தபோது, நீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்றார். 2008ஆம் ஆண்டில் ஒகேனக்கல் பிரச்சினையின்போது, தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா என ஆவேசமாக பேசினார். பின்னர் அந்த வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலான்மை ஆணையம் அமைக்கப்படாமல் இருந்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ரஜினி கலந்து கொண்டார். இதுபோன்ற பிரச்சினைகளாலேயே நதிகள் இணைப்புக்கு ரஜினி தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறார் என்கிறார்கள்.

click me!